பொது மன்னிப்பு வழங்கப்படாவிடினும் சரண் புகுந்த புலிப் போராளிகளில் கணிசமான எண்ணிக்கையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விரும்பியவாறு வாழ்வதற்கு இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

காவல் நிலையம் இராணுவ முகாம் ஆகியவற்றிற்கு வாரம் இருமுறை சென்று ஒப்பமிட வேண்டும் என்று இவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இவர்கள் வாழும் இடங்கள் புலன் விசாரணை செய்யப்படுகின்றன.

முன்னாள் போராளிகள் வெளி நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. கொழும்பு விமான நிலையத்திற்குச் சென்றால் கைது செய்யப்படும் ஆபத்து இருக்கிறது.

இது போதாதென்று வேறு நெருக்குவாரங்களும் காலத்திற்க்கு காலம் தோன்றுகின்றன. கீறீஸ் பூதங்கள் (Grease Devils) என்று பெயரிடப்பட்ட இராணுவத்தின் விசேட அணிகள் சில காலத்திற்கு முன்பு மக்கள் இயல்பு வாழ்வைச் சீரழித்தன.

இந்த விசேட இராணுவத்தினர் இராப் பொழுதில் நடமாடிப் பெண்களையும் இளைஞர்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இராணுவமும் இந்தப் பூதங்களும் ஒன்று தான் என்ற உண்மை அம்பலமாகிய பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இராணுவத்தினர் புதிய தொல்லையை மக்களுக்குக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். கொழும்பின் பேரினவாத இடது சாரித் தீவிரவாதக் கட்சியான ஜாதிக விமுக்தி பெரமுன அதாவது ஜே.வீ.பி இரண்டாக உடைந்து ஒரு பிரவு யாழ்பாணம் வந்து விட்டதாக செய்தி பரவியுள்ளது.

வடபகுதிக்கு வந்த ஜேவீபீ கட்சியினர் தமிழ் இளைஞர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசுக்கு எதிராகப் போராடத் திட்டமிட்டுள்ளதாகக் கதை அடிபடுகிறது. இப்படியான தகவல்களைக் கசிய விடுபவர்கள் இராணுவத்தினரே.

கொழும்பில் இருந்து ஜேவீபியைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் ஓருவரும் யாழ்ப்பாணத்திற்கோ மட்டக்களப்பிற்கோ வரவில்லை. இலங்கை இராணுவத்தின் உளவுத்துறை தான் உள்நோக்கத்தோடு ஜேவீபி என்ற வடிவத்துடன் நடமாடுகிறது.

ஜேவீபீ நடமாட்டத்தை நிரூபிப்பதற்காக இவர்களுக்குத் தங்குமிடம், உணவு வசதி என்பனவற்றை வழங்க வேண்டாமென்று இராணுவ மேலிடம் உத்தரவு போட்டிருக்கிறது.

இராணுவம் அரங்கேற்றும் நாடகத்தின் உச்ச கட்டமாக இதைக் கருதலாம். எதற்காக ஜேவீபீ புரளியைக் கிளப்புகிறார்கள் என்பதற்குப் பதில் கிடைத்துள்ளது.

வடக்கு கிழக்கில் சொந்த இடங்களில் வாழ அனுமதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் எத்தனை பேர் போராட்ட வாழ்விற்குத் திரும்ப விரும்புகிறார்கள் என்று பார்ப்பதற்கும் அவர்களைக் கைது செய்வதற்குமாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஜேவீபீ என்று தம்மைக் கூறிக் கொள்ளும் இராணுவ உளவாளிகள் அரசுக்கு எதிராக வீர வசனம் பேசுகிறார்கள். தமிழ் இளைஞர்கள் தம்மோடு இணைந்து போராட முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

யாருடன் சேர்ந்தாகிலும் அரசுக்கு எதிராகப் போராடினால் போதும் என்ற எண்ணத்தில் ஜேவீபீ என்று தம்மை அழைப்போரின் ஆசை வார்த்தையை நம்பி போராளிகள் ஏமாந்துள்ளனர்.

சிறிது ஆறுதலாகச் சிந்தித்திருந்தால் இவர்கள் உளவுத்துறையின் பொறியில் விழாமல் தப்பியிருக்கலாம் அவசர புத்தி அவர்களைக் காட்டிக் கொடுத்துள்ளது. இவர்கள் மிகவும் எளிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர் தப்புவது கடினம்.

சென்னையிலும் இந்திய றா உளவுத்துறை ஒரு நாடகத்தைக் கன கச்சிதமாக அரங்கேற்றியுள்ளது. ஜக்கிய இராச்சியத்தின் சனல்4 தொலைக் காட்சியைச் சேர்ந்த சிலரை றா சிருட்டித்துள்ளது.

தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் போலிச் சனல் 4 தொலைக்காட்சி நிருபர்களைச் சந்திக்கச் சென்றுள்ளனர். தம்மைப் பற்றிய இரகசியங்களை வழங்கியுள்ளனர்.

இவர்கள் செய்தது படுமோசன மோட்டு வேலை. சிறிதேனும் முன்யோசனை இல்லாமல் சனல் 4 வேடம் தரித்த உளவுத்துறையிடம் பிடியைக் கொடுத்துள்ளனர். இந்திய உளவுத்துறை கைது செய்த இந்த அப்பாவிகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப் படவுள்ளனர்.

ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். பலமுறை யோசித்த பிறகு வாயைத் திறவுங்கள். விழிப்புத் தான் விடுதலைக்கு முதற்படி என்பன போராளிகள் மாத்திரமல்ல அனைவரும் மதிக்க வேண்டிய விதிமுறைகள்.