சர்வதேச ஊடக நிறுவனத்தை நிர்வகிக்க ரூபர்ட் முர்டோக் தகுதி இல்லாதவர் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிக்கியதால், 168 ஆண்டு கால பாரம்பரியமிக்க “நியூஸ் ஆப் த வேர்ல்டு” பத்திரிகை சமீபத்தில் மூடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விசாரணைக் குழு முன், பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோக்கும், அவரின் மகன் ஜேம்சும் ஆஜரானார்கள்.

நடந்த சம்பவத்துக்கு இவர்கள் மன்னிப்பு கேட்டனர். முர்டோக்கின் மகன் ஜேம்ஸ், சர்வதேச பி ஸ்கை பி என்ற நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். சமீபத்தில் இவர், இதன் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரித்த நாடாளுமன்ற குழு, தனது அறிக்கையை இறுதி செய்துள்ளது.

அந்த அறிக்கையில், நாடாளுமன்ற குழு முன் ஆஜரான முர்டோக் தவறான கருத்துகளை தந்துள்ளார். இதன் மூலம் அவர் நாடாளுமன்றத்தை ஏமாற்றியுள்ளார். எனவே அவர் சர்வதேச ஊடக நிறுவனத்தை நடத்த சற்றும் தகுதியில்லாதவர் என 125 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முர்டோக் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.