இந்தியாவும் மியான்மாரும் 3 வருடங்களில் தமது வர்த்தகத்தினை இரட்டிப்பாக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மியான்மார் பயணத்தின்போது இரு தரப்பினாலும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இதில் இரு நாடுகளும் தரை மற்றும் வான்மூலமாக மட்டுமல்லாது தொடர்வண்டிப் பாதைமூலமும் இணைக்கப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் தரைப்பாதையில் தாமதம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் பயணத்தில் வந்த மன்மோகன் சிங்கின் அந்நாட்டுடனான தொடர்பினைக் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட வருகையும் மியான்மார் ஜனாதிபதி தைன் செயினுடன் திங்களன்று பேச்சு நடாத்தியதும் இருதரப்பு உறவுகளுக்கும் ஒரு மைற்கல்லாக இருக்குமெனக் கருதப்படுகின்றது.

கடந்த இரு தசாப்தங்களாகவே புதுடில்லி அந்நாட்டின் இராணுவத்தரப்புடனேயே தொடர்புவைத்திருந்தது. ஆனால் அண்மையில் இடம்பெற்ற ஆன்சாங் சூகியின் விடுதலை போன்ற மாற்றங்களால் மன்மோகன் சிங்கினால் அவரது இரண்டாம் நாள் பயணத்தின்போது ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் பொருளாதாரத் தொடர்புகள் அபிவிருத்தியில் ஒத்துழைப்பு மற்றும் குறிப்பிட்ட பகுதிகளைக் கட்டியமைத்தல் போன்ற விடயங்கள் அடங்கின.

இதில் ஒக்ரோபர் 2011இல் இந்தியாவிற்கு மியான்மார் ஜனாதிபதி வந்தபோது உறுதியளிக்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடனையும் வழங்குவதாகக் கூறப்பட்டது. இதற்காகவென மியான்மார் விவசாய மற்றும் நீர்ப்பாசனப் பகுதிகளையும் தெரிவுசெய்து வைத்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் வாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களை மியான்மாரில் முதலீடுசெய்ய அனுமதிக்கவேண்டுமென்பதற்கும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தப் பயணத்திற்குக் காரணம் சீனாவின் அச்சுறுத்தல்தான் என்ற கருத்துக்கு இந்திய வெளியுறவுச் செயலர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் யுனியன் வங்கியின் அலுவலகமொன்றும் யாங்கூனில் திறக்கப்படவுள்ளது. இது 1.2 பில்லியன் டொலரை இரண்டு மடங்காக்கும் நோக்கிலுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுமே எல்லைச் சந்தைகளைத் திறப்பதுடன் வர்த்தகத்தினையும் முன்னேற்றவுள்ளன.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கிளர்ச்சியைத் தடுக்க மியான்மார் உதவியிருந்தது. இதனால் இனிவருங்காலத்திலும் தீவிரவாதங்களை இணைந்து அழிப்பதற்கான கருத்துக்களையும் வெளியிட்டனர்.

இவ்விரு தலைவர்களதும் முதன்மைப் பேச்சுப்பொருளாக இணைப்பு என்பதே இருந்தது. இதில் வர்த்தகம் மட்டுமல்லாது மக்களுடன் மக்களுக்கான தொடர்புபற்றியும் கதைக்கப்பட்டது.