கர்நாடக முதல் அமைச்சர் சதானந்த கவுடா, பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நித்யானந்தா கைது செய்யப்படுவார் என்றும் சதானந்தகவுடா அறிவித்தார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நித்யானந்தா தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்துவதற்கான அரசு உத்தரவு ராம்நகர் மாவட்ட கலெக்டருக்கு கிடைத்தது. இதனை அவர் போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வாலுக்கு தெரிவித்தார்.

தனிப்படை போலீசார் பீடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இன்று (12.06.2012) சோதனையிடுகிறார்கள். என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை கணக்கிடுவதுடன் அங்கிருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்கிறார்கள்.

நித்யானந்தா ஆசிரமத்தில் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட சுமார் 150 பேர் தங்கி இருந்தனர். நித்யானந்தாவை கைது செய்ய அரசு உத்தரவிட்டதையடுத்து பலர் ஆசிரமத்தை காலி செய்ய தொடங்கினார்கள். சீடர்கள் பலர் தங்களது சீருடைகளை களைந்து சாதாரண உடையில் வெளியேறினார்கள்.

பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களது உடமைகளை கடுமையாக சோதனையிட்ட பின்னரே வெளியேற அனுமதித்தனர். இன்று (12.06.2012) காலை வரை 70 சதவீதம் பக்தர்கள் வெளியேறி விட்டனர். வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்கள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

சோதனை குறித்து கலெக்டர் கூறும்போது, ஆசிரமத்தில் 48 மணி நேரம் சோதனை நடத்தப்படும். அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே சீல் வைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்