நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பிக்கும்போது, மாகாண சபைத் தேர்தல் திருவிழாக்கள் வந்துவிட்டன.

27 ஆம் திகதி நள்ளிரவில் கலைக்கப்பட்ட வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் காலமும் குறிக்கப்பட்டு விட்டது.

இனி என்ன? அணி சேரலிற்கான பேரம் பேசுதல் பல மட்டங்களில் நிகழும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்டீன், மாகாண சபை முதலமைச்சர் பதவி குறித்து சரியான இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று கூறுவதிலிருந்து இப்பேரம் பேசல் அரங்கு, களை கட்டிவிட்டதைக் காணலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டாலும் ஆளும் தரப்போடும், ஐ.தே. கட்சியோடும் பேசிக் கொண்டிருக்கிறது முஸ்லிம் காங்கிரஸ்.
முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸிற்கு வேண்டும் என்கிற வகையில் ஷபீக் ரஜாப்டீன் பேசினாலும், அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி  இதுவரை எதுவித கருத்தினையும் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

நாற்காலிப் பிரச்சினைகளுக்கு அப்பால், கிழக்கில், குறிப்பாக அம்பாறையில் நில ஆக்கிரமிப்பு பற்றிய தான பார்வையில் அதிக கவனத்தை தமிழ் பேசும் சமூகங்கள் செலுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

மாமனிதர் தராக்கி சிவராமுடன் ஊடகர் இளைய அப்துல்லா மேற்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிழக்கின் நீர் நிலவளங்கள் அபகரிக்கப்பட்டு, பெரும்பான்மையாக வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையே  முரண்பாடுகள் எவ்வாறு தோற்றம் பெற்றது என்கிற விவகாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஒலுவில் மற்றும் தீகவாபியை மையப்படுத்தி நான்கு புதிய சிங்களப் பிரிவுகளை அம்பாறையில் உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் கூறுகின்றன.
புதிதாக உருவாகும் புனிதப் பிரதேசங்கள் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிபோகும் ஆபத்து ஏற்படுவதை மூதூரிலும் காணக் கூடியதாகவிருக்கிறது.
தம்புள்ளை, தெஹிவளை, காலி என்று விரிவடையும் பெருந்தேசிய இனவாத ஆதிக்கம், மூதூரில் விகாரைகள் அமைக்கும் பணியோடு மேலும் பல்கிப் பெருகும் சாத்தியப்பாடுகள் உண்டென்பதை தமிழ் பேசும் சமூகங்கள் உணர்கின்றன.

வட, கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பிரித்தாளும் தந்திரங்களை அவதானித்து, அவற்றை நீக்கும் வகையில், சிவில் சமூகங்கள் தமது வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

படையினரின் நில ஆக்கிரமிப்பும், பல் தேசியக் கம்பனிகளின் நிலச் சுவீகரிப்பும், தேசிய இனங்களுக்கிடையே வட கிழக்கு மாகாணங்களில் புதிய முரண் நிலைகளை உருவாக்குகின்றது.
இத்தயை நில அபகரிப்புகளினால் இரண்டு சமூகங்களும் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து பொதுவான இணக்கப்பாட்டிற்கு இவர்கள் வரவேண்டிய அவசியமும் எழுகிறது.

காணி அபகரிப்பு மற்றும் மீனவர்களின் தொழில் பிரச்சினை சம்பந்தமாக உண்ணாநிலைப் போராட்டமொன்றினை மன்னாரில் ஆரம்பிக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கும் இரு சமூகங்களுக்கிடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் சில சக்திகள் தொழிற்படுவதாகக் கூறப்படுகிறது.

சன்னார் பிரதேசத்தில் விரிவுபடுத்தப்படும் படை முகாம்கள், மன்னாரின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதால் அங்கு பூர்வீகமாக வாழும் இரு சமூகங்களும் பாதிப்படையும் என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

தமிழர் பகுதிகளில் விகாரைகளை அமைப்பது இனவாதத்தை தூண்டும் செயலென தேசிய பிக்குகள் முன்னணி கருத்துத் தெரிவித்தாலும் ஆட்சியாளர்கள் அதனை நிறுத்துவார்களா என்று தெரியவில்லை.
இந்த ஆறுதல் வார்த்தைகள், நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்பதால் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் பேராடுகின்றார்கள்.

ஆயினும் கிழக்குத் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டதால், நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களைக் கைவிட்டு தேர்தலிற்கான பணிகளில் கூட்டமைப்பினர் தமது கவனத்தைச் செலுத்துவார்களென்று அரசு எடை போடுகிறது.

"எமது நிலம் எமக்கு வேண்டும்' என்கிற முழுக்கத்தோடு எழும் போராட்டங்களை முடக்க, ஆட்சியாளர் மேற்கொள்ளும் நகர்வுகளில், கிளிநொச்சியில் போராட்டம் நடத்திய ஸ்ரீதரன் எம்.பி.யை. நான்காவது மாடிக்கு அழைத்து புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணை முக்கியமானது.

இவருக்கு விடுதலைப் புலிகளோடு முன்னர் தொடர்பிருந்ததாவென்று ஆராய்கின்றார்களாம்.
நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்கள், சர்வதேச ஊடகப் பரப்பின் சந்து பொந்துகளிற்குள் நுழைய முன்னர், அதனை எவ்வாறாயினும் அடக்கிவிட வேண்டுமென்ற அரசு அவசரப்படுகிறது.

ஆகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரை வரவேற்பது, கிழக்கு மாகாண சபையைக் கலைத்து புதிய தேர்தலை நடாத்துவது, மன்னாரில் சமூகங்களின் மத்தியில் உரசலை ஏற்படுத்துவது போன்ற விவகாரங்கள் யாவும் நில அபகரிப்பிற்கு எதிராக எழும் மக்கள் எழுச்சிகளை முடக்குவதற்கான அரசின் நகர்வுகளாகப் பார்க்கலாம்.

இவை தவிர நிலப்பிரச்சினை குறித்து பேசாமல், வட மாகாண சபைத் தேர்தலை அரசு ஏன் நடாத்தவில்லை என்கிற திசை திருப்பல் விவாதங்களில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுவதையும் கவனிக்கவேண்டும்.
அரசியல் தீர்வு பற்றி பேசுவதைத் தவிர்த்து தேர்தல் களங்கள் குறித்து பெருந்தேசியவாதக் கட்சிகள் இரண்டும் தொடர்ச்சியாக உரையாடுவதன் நோக்கம், அவர்களைப் பொறுத்தவரை, அதிகார நலன் சார்ந்த விடயமாக இருந்தாலும் பின்னணியில் வல்லரசாளர்களின் வகிபாகம் இருப்பதை மறுக்க முடியாது.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்துவதையே ரணிலும் கூறுகின்றார்.
விடுதலைப் புலிகள் போன்று மஹிந்த அரசும் வடக்கில் தேர்தலை நடத்த விடுகிறார்கள் இல்லையென்று ஆதங்கப்படும் ரணில், 2004 இல் நடந்த தேர்தலை மறந்து விட்டார் போலுள்ளது.

இந்த வாரம் எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடாத்திய ஊடகச் சந்திப்பில் பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் நில அபகரிப்புக் குறித்து பேசவில்லை.
வழமைபோன்று வடக்கில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மனோ கணேசனே இது குறித்தான விடயத்தை முன்வைத்தார்.

இவை தவிர குடிசன மதிப்பீட்டு புள்ளி விவரங்களின் பிரகாரம், வடக்கின் சனத் தொகையோடு கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ சமமான அளவில் நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
வடக்கில் தமிழ்த்தேசிய அரசியலின் பிரதிநிதித்துவம், விரைவுபடுத்தப்படும் நில ஆக்கிரமிப்பாலும் குடியேற்றங்களாலும் அளவு ரீதியில் மாறுதலடையும் போல் தெரிகிறது.
அத்தோடு வட கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இரண்டு சமூகங்களுக்கும் இக் குடியேற்றங்கள் பல செய்திகளைச் சொல்லப் போவதை உணரலாம்.

அதிகாரமற்ற மாகாண சபைகளாலும் பூர்வீக நிலங்களை காப்பாற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படும்.

இதனால் ஏற்படும் பாதிப்பு, தற்போது ஒரு சமூகத்தால் எதிர்கொள்ளப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அதன் நீட்சி அடுத்த சமூகத்தையும் முழுமையாகப் பாதிக்குமென்பதை நினைவிற்கொள்ளுதல் நன்று.