இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும் மக்கள் உரிமை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

சிதம்பரம் கீழவீதி சரவணா திருமண மண்டபத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் “தமிழர் எழுச்சி வடிவம்” என்ற நூலின் அறிமுக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில்  பங்கேற்று பேசினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீரம் செழிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தற்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம் நூல் எழுதப்பட்டது.

உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை வேறொன்றுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் பிரபாகரன் போராட்டத்துக்கு எந்த நாடுகளின் உதவிகளும் கிடைக்க வில்லை. 20 நாடுகள் அணி திரண்டு ஒழிக்க முயற்சித்தன.
 உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிதியைத் திரட்டி ஆயுதங்களைப் பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்போரை நடத்தியவர் பிரபாகரன். இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் பிரபாகரன் தலை மையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும்.
பிரபாகரன் வீரம் செறிந்த வரலாறு கொண்ட இந் நூல் தமிழக இளைஞர்களுக்கு அளித்த ஆயுதமாகும். ஒரு கருவியாகும். இந்த நூலைப் படிக்கும் இளைஞர்கள் பிரபாகரனின் அடுத்த கட்ட போராட்டத்துக்குத் துணை நிற்க வேண்டும். தோள் கொடுக்க வேண்டும்.

எப்படியாவது பதவி பெற்று, அதனை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடையே இன்றைய அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ளன. இந்த மாயையை மாற்றுவதற்கே இப்படிப்பட்ட நூல் எழுதப்பட்டது. தமிழர்கள் நிலை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். நாளை மலேசியத் தமிழர்களுக்கு இந்தநிலை ஏற்படலாம். ஏன் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இந்நிலை ஏற்படலாம். எனவே நாம் இந்தக் காலகட்டத்தில் விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து அனைத்துவித தியாகத்துக்கு தயாராகி போராட துணிய வேண்டும். தமிழர்களின் முதலாவது, இறுதியான எதிரி இந்தியா. இலங்கை தமிழர் படுகொலையில் ராஜபக்ஷ மட்டும் குற்றவாளி அல்லர்.

மன்மோகன் சிங்கும் குற்றவாளியே, அதற்குத் துணையாக நின்ற கருணாநிதியும் குற்றவாளி நான் என்றார்.